உறையூர் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி (திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும். காவேரியாற்றின் தென்கரையில், திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது. உறையூர் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது. அப்போது அதன் பெயர் உறந்தை .
சிலப்பதிகாரம் சொல்கிறது :
"மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும் கலிகெழு வஞ்சியும், ஒலி புனல் புகாரும் அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின்" – வேனிற் காதை.
சோழர் காலத்தில் வலிமையான தலைநகர் என்ற பெருமைக்கு உரியது. “காவிரி படப்பை உறந்தை அன்ன” -அகநானுறு385.
“உறந்தை அவையத்து அறம் நின்று நிலையாற்றும்” - புறநானுறு .
தித்தன் என்ற சோழ மன்னன் மகள் காவிரியில் தெப்பம் ஆடி மகிந்த சேதியும் புறநானுற்றில் காணப்படுகிறது. கோவலனும், கண்ணகியும், கவுந்தி அடிகளும் உறையூருக்குச் செல்லும்போது, உறையூரைக் கோழிச்சேவல் யானையை வீழ்த்தின இடம் என்று இளங்கோ அடிகள் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.
பிசிராந்தையார்-கோப்பெருஞ் சோழன் நட்புக்கு இலக்கணம் தந்து புகழ் சேர்த்த ஊர் உறந்தை. பல நூறு ஆண்டுகளாக சோழ மன்னர்கள் உறந்தையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்திய வரலாறும் உளது. உறந்தை எனும் உறையூரில் வாழ்ந்த பல சங்க காலப் புலவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ஊர் பெயரை இணைத்துக்கொண்டனர் . (உறையூர் இளம்பொன் வாணிகனார்,உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், உறையூர் முது கண்ணன் சாத்தனார், உறையூர் முதுகூத்தனார்….)
ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய "தமிழகம் ஊரும் பேரும்" என்ற நூலில் "ஊர் எனப்படுவது உறையூர்" என்றுகுறிப்பிட்டுள்ளார்.
"உறையூர் நகரை நோக்கி கிரேக்கர்களும் ரோமானியர்களும் அடிக்கடி வந்து வணிகம் மேற்கொண்டனர். மேற்குக் கடற்கரையிலிருந்து, மேற்குத் தொடர்ச்சி மலையின் “பாலக்காட்டுக் கணவாய்” வழியாகத் தொடங்கும் ‘இராஜகேசரி பெருவழி’ (இன்றைய “தேசிய நெடுஞ்சாலை 67″) என்ற வணிகப் பெருவழி உறையூர் வழியாக கிழக்குக் கடற்கரையின் பூம்புகார் துறைமுகம் வரை நீண்டிருந்தது. உறையூரிலிருந்து காவிரி ஆற்றின் வாயிலாக பூம்புகார் துறைமுகம் வரை சிறு படகுப் போக்குவரத்து இருந்துள்ளது. " என்ற வரலாற்றுக் குறிப்புகளும் உளது. இந்தச் சிறப்பான சோழர்களின் தலைநகர் 13ஆம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரப் பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் படையெடுப்பால் பெருமளவு சீர்குலைந்து.
இன்றைய பூம்புகார்தான் அன்றைய புகார் . பண்டைய சோழர்களின் துறைமுக நகரம். கடலில் ஆறு புகுமிடம் என்பது 'புகும் ஆறு' என மருவிப் 'புகாறு' ஆகி, மேலும் மருவிப் 'புகார்' என நின்றது. காவிரி ஆறு கடலில் புகுமிடத்தில் இருந்த பட்டினம் என்பதினால் காவிரிப்பூம்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. சங்ககாலத் தமிழகத்தில் இருந்த துறைமுகங்களில் கிழக்குக் கடற்கரையில் சோழர்களின் உலகத்தரம் வாய்ந்த துறைமுகமாக காவிரிப்பூம்பட்டினம் விளங்கியது பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் காவிரிப்பூம்பட்டினம் வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப்பட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.
“ காவிரிப்பூம்பட்டினத்தில் வளம் நிறைந்த தெருக்கள் காணப்பட்டன . கடல் வழியே வந்த சவாரிக் குதிரைகள், வண்டியில் வந்த மிளகு மூட்டைகள், வடமலையில் இருந்து வந்த மணிக்கற்கள், மேற்கு மலையில் இருந்து வந்த சந்தனம், அகில், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை, காவிரி-வெளி விளைச்சல்கள், ஈழத்து உணவு,[5] காழகத்து ஆக்கம்[6] முதலான பண்டங்கள் தெருக்களில் மண்டிக்கிடந்தன. புகார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சிறப்பாக நடைபெற்றதையும், இப்பொருட்களுக்குச் சுங்கம் வசூலிக்கப்பட்டதையும், இதற்கு அடையாளமாக அப்பொருட்களின் மேல் சோழ அரசின் புலி முத்திரை இடப்பெற்றதையும்” பட்டினப்பாலை பாடல் வரிகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. சோழர்களின் பெருமை சொல்லும் இந்திர விழா நடந்த ஊர் பூம்புகார். கண்ணகி, கோவலன் ,மாதவி எனும் காப்பிய மாந்தர்கள் பிறந்து தவழ்ந்த ஊர் பூம்புகார்.கரிகாலன் இமயம் வரை சென்று பலரையும் வென்று கொணர்ந்த பொருள்கள் பூம்புகார் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
பாரதிதாசன் பல்கலைக்கழக அகலாய்வு அறிக்கை சொல்கிறது: 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் பூம்புகார்.. இங்கு ஒரே நேரத்தில் 70-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிற்கும் அளவுக்கு மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச் சுற்றிலும் பல விதமான கட்டிடங்களைக் கொண்ட மணலால் மூடப்பட்ட சுற்றுச்சுவருடன் கூடிய குடியிருப்புகள், அழிந்த நிலையில் அடித்தூண்களுடன் கலங்கரை விளக்கம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
தொல்பொருள் ஆய்வுத் துறையினர் புகார் பகுதியில் நடத்திய ஆய்வுகளில் கிடைத்த பண்டைய சோழர்கால நாணயங்கள், ரோமாபுரி நாணயங்கள், மிகப்பெரிய செங்கற்கள், கிணறுகள், புத்த விகாரம், புத்த பாதம், படகுகளை நிலைநிறுத்த பயன்படும் மரங்கள், அகழ்ந்து காணப்பட்ட செங்கல் கட்டடப் பகுதி ஆகிய யாவும் பண்டைய புகார் நகரின் பெருமையை உறுதிப்படுத்துகின்றன.
மாதவியின் மகள் .மணிமேகலை வஞ்சிமாநகரில் சமயக் கணக்கர்களிடம் பல்வேறு சமயநெறிகளைக் கேட்டறிந்துகொண்டிருந்த காலத்தில் புகார் நகரம் கடலால் கொள்ளப்பட்டது. (இன்றைய காலத்தில் சுனாமி) அப்போது பௌத்த துறவி அறவண அடிகள், பௌத்த துறவறம் மேற்கொண்டிருந்த மாதவி முதலானோர் தப்பிப் பிழைத்து, காஞ்சிபுரம் சென்றனர் என்ற வரலாற்றுக்குக் குறிப்புகள் உள்ளன.
குடவாயில் என்பது இக்காலத்தில் குடவாசல் என்னும் பெயருடன் திகழ்கிறது. கும்பகோணம்- திருவாரூர் சாலையில் குடவாசல் உள்ளது.
சங்ககாலத்தில் பெரும்பூட்சென்னி என்ற சோழன் ஆட்சி செய்த ஊர் குடவாயில். சேரமான் கணைக்கால் இரும் பொறையை வென்று அவனை இக்குடவாயிற் சிறைக் கோட்டத்திலே பெரும்பூட்சென்னி சிறை வைத்த சேதி புறநானுற்றில் காணப்படுகிறது . பெரும்பூட்சென்னி ஆட்சிசெய்த காலத்தில், குடவாயில் ஒரு நெற்களஞ்சியமாக திகழ்ந்தது . அகநானூற்றில் வரும் செய்தி ஒன்றால், சங்ககாலத்தில் குடவாயில் சோழர்களின் கருவூல நிலையமாக இருந்ததென்று அறிய முடிகிறது.
குடவாயில் நல்லாதனார், குடவாயில் கீரத்தனார் போன்ற புலவர்கள் பாடியுள்ள பாடல்கள் அகநானூறு எனும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. தன் காதலியின் மார்பகம் தண்குடவாயில் போல் உளது என்று காதலன் சொல்வதாக ஒரு பாடலே எழுதியுள்ளார் குடவாயிற் கீரத்தனார்.
கோச் செங்கட் சோழன் என்ற மன்னன் ஆட்சிசெய்த காலத்தில் குடவாயிலில் மாட மாளிகைகள், கூட கோபுரங்களை கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட மாடக்கோயில்கள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றதாகவும் ஓர் வரலாறும் உள்ளது .
அக்காலத்தில் சைவதிருமறை தேவாரப்பாடல்கள் பாடப் பெற்ற தலங்கள் மொத்தம் 276. அதில் காவிரியின் தென்கரையில் உள்ள குடவாயில் 94வது திருத்தலமாக விளங்கியது. கல்வெட்டுச் சிறப்பு உடைய தலம் இஃது. மூன்று கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கல்வெட்டில், இறைவன் பெயர் 'குடவாயில் உடையார்' என்றும், இறைவி பெயர் 'பெரிய நாச்சியார்' என்றும், கோயிலின் பெயர் 'பெருந்திருக்கோயில்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
இன்றும் குடவாசல் சென்றால் பேருந்துச் சாலையை அடுத்துக் கோயிலைக் காணலாம் . மேற்கு நோக்கிய சந்நிதி. கோயில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்சமூர்த்திகள் உருவங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள்நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி போன்றன புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றன. சண்டேசுவரர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. நடராஜசபை அழகானது. நடராஜப் பெருமானின் அவிர்சடை அழகு நம் மனத்தை விட்டகலாது.
சந்நிதிக்கு வெளியில் பக்கவாட்டிலுள்ள காசி விசுவநாதர் சந்நிதியில் சிவலிங்கத் திருமேனி செம்மண் நிறத்தினது. இருபத்து நான்கு படிகளைக் கடந்து மேலே சென்றால் மூலவரை - கோணேசுவரரைத் தரிசிக்கலாம். மேற்கு நோக்கிய சந்நிதி. பெரிய சிவலிங்கத் திருமேனி, மன நிறைவான தரிசனம் கிடைக்கும். இக்கோயிலைத் தவிர சோழர்கள் காலத்தில் கருவூலமாக , நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த குடவாசல் இன்று கேட்பாறற்றுக் கிடக்கிறது. கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து குடவாசல் செல்வதற்கு பேருந்துகள் உள்ளன.
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் “கோயில்வெண்ணி” என்னும் பெயருடன் இன்றுள்ள ஊர்தான் சங்ககால வெண்ணி. இதனைத் திருவெண்ணி என்றும் , குறிப்பிடுவர். இவ்வூரினை "வெண்ணிப்பறந்தலை" என்றும் சங்ககால ஏடுகள் குறிக்கின்றன. பறந்தலை என்றால் போர்க்களம் . வெண்ணி எனும் ஊர் கரிகாலச்சோழன் காலத்தில் போர்க்களமாக இருந்த காரணத்தால் "வெண்ணிப்பறந்தலை” என்று அழைக்கப்பட்டது.
சேர அரசனான பெருஞ்சேரலாதன் என்பானுடன் கரிகாலன் போர்புரிந்த களம் வெண்ணிப்பறந்தலை .கரிகாலன் தன் வலிமையையெல்லாம் காட்டி எய்த அம்பு சேரலாதனின் மார்பில் பாய்ந்து முதுகுப்பக்கமாக ஓடிவிட்டது. சேரலாதன் முதுகில் பட்ட புண்ணுக்காக நாணினான். முதுகுப் புண்ணோடு மேலும் போரிட விரும்பவில்லை. போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் நீத்தான்.
வெண்ணிக் குயத்தியார், சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவிஞர். குயவர் குலத்தைச் சேர்ந்த இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66-வது பாடலாக அமைகிறது. மற்ற பாடல்கள் கிடைக்கவில்லை. வெண்ணிப்பறந்தலையில் கரிகாலனிடம் தோற்று, புறப்புண் நாணி வடக்கிருந்த சேரனை 'நின்னினும் நல்லன்' என கரிகாலனிடம் உரிமையுடன் புகழ்ந்துரைத்ததால் புகழ்பெற்ற பாடல் அது .வெண்ணியில் போர்க்களம் மட்டும் அல்ல , ஒரு திருத்தலமும் இருந்தது.
"வெண்ணி என்ற திருத்தலத்திலே விரும்பித் தங்கியிருக்கின்ற உலகியலிலிருந்த வேறுபட்டவராகிய சிவபெருமானார், தொண்டுகளால் விளங்கும் அடியவர்களுக்கு ஒப்பற்ற வழியாய் உள்ளவரும், திருநீறு அணிந்த மார்பினரும், தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி தழற்பிழம்பாய்க் காட்சி வழங்கிய பழம்பொருளானவரும், வண்டுகள் தங்கும் கொன்றை மாலை அணிந்தவரும், தேவர்களுக்காக விடத்தை உண்டவலியவரும், பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவரும் ஆவார்." என்று ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகம் குறிக்கிறது .
“சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும் விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை உடையானை யல்லதுள் காதென துள்ளமே.” 2.014.1 (இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.014.திருவெண்ணியூர்)
அன்றைய சோழ நாட்டின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்று திருவாரூர் . அந்தத் திருவாரூர்தான் இன்று திருவாரூர் மாவட்டமாக உள்ளது . மன்னார்குடி ,வலங்கைமான், குடவாசல் ,நன்னிலம் , நீடாமங்கலம் ,திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் , முத்துப்பேட்டை,திருவாரூர் போன்ற ஊர்கள் இம்மாவட்டத்தில் உள்ளன .இன்று நீங்கள் குடவாசல் வட்டம் சிமிழி ஊராட்சியை கடந்து சென்றால் “ தலையாலங்கானம்” எனும் கிராமத்தைக் காணமுடியும் . இந்தக் கிராமத்தில்தான் சங்க காலத்தில் நடைபெற்ற போர்களில் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்பட்ட தலையாலங்கான போர் நடைபெற்றது என்றால் உங்களால் நம்பமுடியாது; ஆனால் அதுதான் உண்மை. புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை போன்ற சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்பட்ட போராக இதைச் சொல்லலாம். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் அவனை எதிர்த்து வந்த சேர,சோழ மன்னர்கள் மற்றும் ஐந்து வேளியர்களுக்கும் இடையில் நடந்த போர் இது.
(வேளிர் என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள் ஆவர். இவர்களை குறுநில மன்னர்கள் என்றும் சொல்வார்கள் . வேளிர் குடிமக்களின் அரசன் பெயரோடு வேள் இணைந்தே வரும். வேள் என்றால் வள்ளல் தன்மை உடையவன் என்று பொருள் . எடுத்துக்காட்டு : வேள் பாரி . சங்ககாலத்தில் வேளிர்கள், மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது மூவேந்தர்கள் சில வேளியர்களை சேர்த்துக்கொண்டு போரிடுவர் . சில நேரங்களில் மூவேந்தர்கள் வேளியர்களுக்கு எதிராகவும் போரிடுவர்)
தலையாலங்கானப் போருக்கான காரணம் என்ன? வயதில் மிகச் சிறியவனான பாண்டியன் நெடுஞ்செழியன் அப்போதுதான் பட்டத்திற்கு வந்திருந்தான். ஆகவே அவனை எளிதில் தோற்கடித்துவிட்டு பாண்டிய நாட்டைக் கைப்பற்றிவிடலாம் என்று சோழ அரசன் கிள்ளிவளவன் நினைத்தான். பாண்டிய நாட்டின் செல்வச் செழிப்பு வேறு அவன் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது. அதனால் ஏற்கெனவே பாண்டியனோடு பகை கொண்டிருந்த “யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ என்ற சேர மன்னனைத் துணைக்கு அழைத்துக்கொண்டான் . ஐந்து வேளியர்களோடு ஒரு கூட்டணியும் ஏற்படுத்திக்கொண்டான் .
போர் தொடங்கியது .என்னதான் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் எதிரியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர வேறு எந்தவித ஒற்றுமையும் இல்லாத காரணத்தால் கூட்டணிப் படைகளிடையே சரியாக ஒருங்கிணைப்பும் அணிவகுத்தலும் இல்லை. ஆனால் பாண்டியப் படைகளோ இளமையான, வலுமிக்க, வீரம் மிகுந்த அரசனைத் தலைவனாகக் கொண்டிருந்தன. திறமையான பழையன், மாறன் போன்ற படைத்தளபதிகளால் வழிநடத்தப்பட்டன. எனவே போரின் முடிவு பாண்டியர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
எனவேதான் ‘தமிழ் மயங்கிய தலையாலங்கானம்’ என்று தமிழகத்து வீரம் முழுவதுமே இந்தப் போர்க்களத்தில் இருந்தது என்கிறார் புலவர் குடபுலவியனார். இன்றைய தலையாலங்கானம் கிராமத்தில் அகழ்வாய்வு நடத்தினால் அன்றைய தமிழனின் வீரத்தின் எச்சங்களை ,விழுமியங்களைக் காணமுடியும் என்பது அகழாய்வாளர்களின் நம்பிக்கையாகும்.
தருமபுரி அல்லது தர்மபுரி என்பது தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தருமபுரி சிறப்பிடம் பெற்றிருந்தது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான பாறை ஓவியங்கள், கல் திட்டைகள், கல்வட்டங்கள், மலைக்கோட்டைகள், பெருங்கற்கால ஓவியங்கள் மற்றும் பெருங்கற்கால கருவிகள் கிடைத்துள்ளன.
தருமபுரி சங்க காலத்தில் “தகடூர்” என அழைக்கப்பட்டது. தகடூர் என்ற பெயர் இரண்டு தமிழ் சொற்களிலிருந்து உருவானது, "தகடு" அதாவது இரும்பு (இரும்பு தாது) என்று பொருள் மற்றும் "ஊர்" அதாவது "இடம்" என்று பொருள்படும். இரும்பு தாதுகள் நிறைந்த ஊர் என்பதால் தகடூர்.
தகடூரைத் தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி புரிந்தார். இவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர்.
புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. , தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் ஜம்பை எனும் இடம் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. அதியமானுக்கும், சேரனுக்கும் இடையில் தகடூரில் போர் ஒன்று நடைபெற்றுள்ளது அதனை “தகடூர்ப் போர்” என்பர். தகடூர்ப் போர் பற்றிய நூலே "தகடூர் யாத்திரை"ஆகும். இந்நூல் நமக்கு முழுவதும் கிடைக்கவில்லை. சிலபாக்களே கிடைத்துள்ளன. அந்தப் போருக்குப் பின் நடந்த போரில் சேரமான் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமானிடமிருந்து தகடுரைக் கைப்பற்றி ஆண்டிருக்கிறார்.
சங்ககாலத்திற்குப் பின் தகடூர் 8 ஆம் நூற்றாண்டுவரை பல்லவ அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் 9 ஆம் நூற்றாண்டில் இராஷ்டிரகூடர் கைப்பற்றினர் , . பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் அவர்கள் சோழர்களால் தோற்கடிக்கப்பட்டு, இந்நகரம் சோழர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் போது, இன்றைய தருமபுரி மாவட்டம் மைசூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதனைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் முயன்றனர் . ஆங்கிலேயருக்கும் மைசூர் மன்னர்களுக்கும் நடந்த மூன்றாவது போருக்கு பின்னர், அவர்களுக்கு இடையே செரிங்கப்பட்டம் எனும் இடத்தில் நடந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் படி திப்பு சுல்தான் இன்றைய தருமபுரி உள்ளிட்ட தனது பிரதேசங்களில் ஒரு பகுதியை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் வழங்க ஒப்புக்கொண்டார். பின்னர் இது பிரித்தானிய இந்தியாவின் நிர்வாக துணைப்பிரிவான, மதராசு மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் மக்களின் தலைவர் காமராஜர் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் தருமபுரி வளர்ச்சி காணவேண்டும் என்று கனவோடு தருமபுரியை ஒரு தனி மாவட்டமாக உருவாக்கினார் . அவர் ஆட்சிக்குப் பின் இன்றளவும் தருமபுரி ஒரு வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாறவில்லை என்பது பரவலாக பேசப்படுவது ஓர் உண்மையாகும்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது பிரான்மலை. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பிரான்மலை தான் முல்லைக்கு தேரீந்த `பாரி’ ஆண்ட பறம்பு மலையாகும் சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. கபிலர் போன்ற புலவர்களால் பாடப்பெற்ற புகழ் பறம்புமலைக்கு உள்ளது.
"ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்" -என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் அழகாகத் தெரிவதாக பறம்பு மலை அமைந்துள்ளது.
பறம்புமலையினை பாரி ஆண்ட பறம்புநாடு என்றும் சொல்வர். பறம்புநாடு 300 ஊர்களைக் கொண்டது. இந்த நாட்டிலிருந்த ஒரு குளம் எட்டாம் நாள் பிறைநிலா போல வளைவாக இருந்துள்ளது. பறம்பு மலையில் ஓர் ஊரிலிருந்த ‘பனிச்சுனை’ நீர் மிகவும் சுவையானது.இந்தச் சுனைநீர் எப்போதாவது மட்டுமே கிட்டும். பறம்புமலையில் மூங்கில், நெல், பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, தேன் ஆகியவை விளைந்த சேதியை கபிலர் பாடல்களில் காணலாம்.
சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்த இந்தப் பறம்பு நாட்டை வேள்பாரி. கி.பி 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்டார். வேளிர் குலத் தலைவனாக விளங்கிய பாரி ஈரத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர். சங்க காலத்து நல்லிசைப் புலவர்களான கபிலர், ஔவையார், மிளைக்கந்தனார், நக்கீரர், புறத்திணை நன்னாகனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் முதலியோர் வள்ளல் பாரியையும் பறம்பு மலையையும் பாடியுள்ளனர். பக்தி இலக்கியக் காலத்து திருஞான சம்பந்தரும், அருணகிரி நாதரும் பாடியுள்ளனா்.
பாரியின் புகழை விரும்பாத சேர,சோழ ,பாண்டிய மன்னர்கள் கூட்டணி அமைத்து பாரியை போரில் வென்றனர். பின்னர் பறம்பு நாடு பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. மூவேந்தர்களுக்குப் பின்னர் பறம்புமலை பெயர் மாற்றம் பெற்றுப் பிரான்மலை என்று அழைக்கப்பட்டது இக்காலகட்டத்தில் இது இராமநாதபுரம் சமசுதானத்திலும், சிவகங்கைச் சீமைக்குட்பட்டும் இருந்துள்ளது. ஆங்கிலேளயர்கள் வருகையின்போது இம்மலைப்பகுதி மருதுசகோதரர்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. ஆங்கிலேயருக்கு எதிராக மருது சகோதரர்கள் போராடிய போது அந்தப் போராட்டக் குழுக்களின் முக்கியப் பகுதியாக பிரான்மலை விளங்கியிருக்கிறது. கட்டப்பொம்மன் சிறைப்பட்டவுடன் அங்கிருந்து தப்பித்த ஊமைத்துரை மருதுபாண்டியர்களை நாடி வந்தபோது அவரை மனிதர்கள் யாரும் காணமுடியாதபடி பிரான்மலையுச்சியில் ஒளித்து வைத்துள்ளனர். இந்த இடம் இன்றும்" ஊமையன் குடம்பு "என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான மருதுபாண்டியர்களின் போரில் பறம்புமலை எனப்படும் பிரான்மலை ஒரு முக்கியக் கோட்டையாக விளங்கியிருக்கிறது. உலகத்திலேயே முதன்முதலாக இராக்கெட் தாக்குதல் முறையில் போர் நடந்துள்ளது. மலையுச்சியில் இன்றும் ஓர் பெரிய பீரங்கி அதன் நினைவாக இருக்கிறது. ஆங்கிலத் தளபதி வெல்ஸின் இராணுவக்குறிப்புகள் பிரான்மலையின் கோட்டையமைப்பைக் குறித்துப் பெரிதும் விளக்குகின்றன. பறம்புமலையாகிய பிரான்மலையை வெல்சு அவர்கள் “பெறாமல்லே” (PERAHMALLE) என்று குறிப்பிடுவதோடு அதன் நுட்பங்களைக் குறித்தும் விளக்குகிறார். கண்காணிப்புக் கோபுரங்களும், எதிர்த்தாக்குதல் நடத்தும் இரகசிய வழிகளும் நிறைந்ததாக அந்தக் கோட்டை இருந்திருக்கிறது என்பதும் அவரது குறிப்புகளில் காணப்படுகிறது.
தற்காலச் செய்திகள்: பாரிவேட்டை என்ற பெயரில் ஒரு வேட்டை இன்றும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பிரான் மலையிலிருந்து 15 கி.மீ. எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வேட்டையை மரபாக நடத்தி வருகின்றனா். இம்மலைக்குத் தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும். முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் “கொடி தளும்பினால் குடி தளும்பும்” என்னும் சொலவடை வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன.
அது சரி ....அது என்ன "சொலவடை " மறைமுகமாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை வாய்மொழி இலக்கியம் தான் " சொலவடை" என்பது. இது பெரும்பாலும் வட்டார வழக்கில் இருக்கும், இலக்கண மரபுப்படி பழமொழி என்றும் சொல்வர். எடுத்துக்காட்டு : "அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்"
பொதினி என்னும் சங்ககால ஊர்தான் இன்றைய பழனி மலை . ஆறு மலைமுகடுகளைக் கொண்ட அழகிய ஊர் அது . அதில் ஒரு முகடு பொதினி. அந்த முகட்டின் பெயரால் அந்த ஊர் அமைந்தது. பொதினி குன்றம் மகளிர் மார்பக முகடு போல் பொலிவுடன் திகழ்ந்தது. அத்துடன் பொன்வளம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று. பொதினி நகரில் வைரக் கற்களுக்குப் பட்டை தீட்டும் வணிகமும் நடைபெற்று வந்தது. போதினியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சங்ககால மன்னன் நெடுவேள் ஆவி. நெடுவேள் ஆவி என்பது முருகன் பெயர்களில் ஒன்று.
வேளியர்கள் காலத்தில் இதனை பன்றி மலை என்றம் , பின்னர் வையாபுரி நாடு என்றும் அழைக்கப்பட்டது. பன்றி மலை என்ற பெயர் மருவி பழனி மலை என்று அழைக்கப்பட்டது என்றும் கூறுவர். பொதினி எனும் ஊருக்கு ஆவிநன்குடி . என்றும் ஒரு பெயர் இருந்தது சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் ஆவினன்குடி குறித்தும் எழுதியுள்ளார் "தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்" என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.
மேலும் ஆவியர் குலம் என்பது ஒரு குறுநில மன்னர் குடிக்குப் பெயர். அவர்கள் அரசாண்ட இடம் ஆதலால் ஆவிநன்குடி என்று ஊருக்குப் பெயர் வந்தது. ஆவி, வையாவி என்று இரு வகையிலும் ஆவியர் குல மன்னர்களை வழங்குவதுண்டு. ஆதலால் வையாவிபுரி என்றும் சொன்னார்கள்; அதுவே நாளடைவில் வையாபுரி என்று மாறியது. அந்த ஆவியர் குலத்தில் வந்தவன் பேகன் என்னும் குறுநில மன்னன். பாரியைப்போல அவனும் ஒரு சங்ககாலச் சிற்றரசன், கடையெழு வள்ளல்களில் ஒருவன் அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சொல்லுவார்கள். மேலும் வையாவிக் கோப்பெரும் பேகன் மூவேந்தர்களில் ஒருவரான சேரர் குடியின் தொடர்புடையவன். இவன் குடி முதல்வன் வேளாவிக் கோமான். சேரன் செங்குட்டுவனது மாற்றாந்தாயின் தந்தைதான் வேளாவிக் கோமான். அஃதாவது சேரன் செங்குட்டுவனுக்குப் பாட்டன் முறையினன்.
சிறந்த கொடையாளியான வையாவிக் கோப்பெரும் பேகன் குளிரால் வாடிநின்ற மயிலுக்குப் போர்வை போர்த்தினான் என்ற குறிப்புகளும் உளது.சங்க காலப் புலவர்களில் தலைமையும் புகழும் பெற்றவர் கபிலர். அவர் பல முறை இவனது அரண்மனைக்கு வந்து சென்றுள்ளார்.
பேகனைப் பற்றி பரணர் பாடிய புறநானுற்றுப் பாடல் இது: " அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும், உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும், வரையா மரபின் மாரி போலக், கடாஅ யானைக் கழற்கால் பேகன் கொடைமடம் படுதல் அல்லது, 5 படைமடம் படான் பிறர் படைமயக் குறினே."
இவ்வாறு பேகன் போன்ற மன்னர்களால் ஆளப்பட்ட பொதினி மலை பின்னர் பன்றி மலை என்ற பெயர் மருவி அதன்பின் பழனி மலை என்று அழைக்கப்பட்டது. பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லின் அடிப்படையில் உருவான பெயரே பழனி என்ற கருத்தியலும் உளது . பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது என்பர். சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் பழனி மலையில் உள்ள முருகன் சிலை போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது.
இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி விளங்குகிறது: திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு திசையில் சுமார் 58 கிலோமீட்டர் தூரத்தில் பழனி நகரம் இருக்கின்றது. கொடைக்கானல் நகரத்திற்கு வடக்கு திசையிலையும், உடுமலைப்பேட்டை தெற்கு திசையில், பழனி மலை அமைந்துள்ளது.
சங்ககாலத்தில் “கானப்பேரெயில்” என வழங்கப்பட்ட ஊர் தான் இன்றைய காளையார் கோயில்.. இதன் பண்டைய பெயர்கள் திருக்கானப்பேர் மற்றும் தலையிலங்கானம். சங்க காலத்தில் இந்த ஊரை ஆண்ட மன்னன் வேங்கைமார்பன். அன்று காளையார் கோவிலில் ஆழ்ந்த, அகழியினையும், வானளாவிய நெடிய மதில்களையும அடர்ந்த காவற் காட்டினையும் அமைத்து, வேங்கைமார்பன் உருவாக்கிய காளையார் கோவில் பகைவர் பற்றற்கரிய பேரரணாய் அமைந்தது.
காளையார் கோவிலைச் சுற்றி இருக்கும் காட்டின் அடர்த்தி தமிழக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டது. பேரரசுச் சோழர் (imperial chozas) காலத்தில், இந்தக் காடு இன்றையைக் காட்டிலும் பரந்து பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரை இருந்துள்ளது . அதே போல திண்டுக்கல், அழகர்கோவில் வரை இன்னொரு காடும் இருந்தது . கானத்தின் வடகிழக்கு எல்லையாய் இருந்த ஊர்தான் இன்றைய கான் நாடு காத்தான்.
வேங்கை மார்பனின சிறப்பினைக் கண்டு மனம் பொறாத கடைச்சங்க கால பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி பெரும் படையுடன் காளையார் கோவிலை முற்றிகை யிட்டான். வேங்கை மார்பனையும் வென்றான். பாண்டியர் ஆட்சிக்குப்பின் மதுரை நாயக்க மன்னர்கள், இராமநாதபுர சேதுபதி மன்னர்கள், சிவகங்கை மன்னர்கள் ஆகியோரின் ஆட்சிக்கு உட்பட்டது காளையார் கோவில் . சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதத்தேவர் வேலுநாச்சியாரை மணம் முடித்தார். வேலுநாச்சியார் சிவகங்கைச் சீமைக்குப் பட்டத்து இராணியானார். வேலுநாச்சியார் படைத்தளபதிகளான இருந்தவர்கள் மருது சகோதரர்கள்.
முத்துவடுகநாதர் ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட மறுத்ததால் இருவருக்கும் பகை மூண்டது. . ஒரு நாள் முத்து வடுகநாதர் காளையார் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு வெளியில் வரும்பொழுது வெள்ளையர்கள் படை திடீர் தாக்குதல் நடத்தியது. மன்னர் படை வீரப்போர் புரிந்தது. இறுதியில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு மன்னர் இரையானார்.
காளையார் கோவில் நவாப்பின் வசம் போனது. வேலுநாச்சியாரை கைது செய்ய ஒரு படை சிவகங்கை கோட்டைக்கு அனுப்பப்பட்டது. கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த வேலு நாச்சியார் அவரைக் காண காளையார் கோவில் வந்தார் . இராணி கோட்டையை விட்டு வெளியேறிய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய நவாப்பின் படைகள் சிவகங்கை கோட்டையைக் கைப்பற்றியது. எனினும் மருது சகோதரர்களின் வலிமையான படை திரட்டிப் போர் புரிந்து மீண்டும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றி வேலுநாச்சியாரை அறியணையேற்றினார் . கி பி 1800 ரில் நாச்சியார் இறந்துவிடவே மருது சகோதரர்களின் பலம்மிக்க இராணுவக் கோட்டையாக மாறியது காளையார் கோவில் இவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பொழுது (1800-1810) காளையார் கோவில் ஒரு முக்கிய போர்க்களமாக இருந்தது . பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்ட காளையார் கோவிலில் பழமைமிக்க சிவாலயம் ஒன்று உள்ளது. காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூன்று தெய்வங்களின் சந்நிதிகள் இவ்வாலயத்தில் உள்ளன. காளீஸ்வரர் சந்நிதியிலுள்ள கருவறை லிங்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். சிவகங்கையில் இருந்து 18 கி.மீ தொலைவில், காரைக்குடியில் இருந்து 36 கி.மீ தொலைவில் உள்ளது இன்றைய காளையார் கோவில்.
உம்பல் எனும் சொல்லுக்கு யானை என்பது பொருள். சங்க காலத்தில் கொங்கு நாட்டைச் சேர்ந்த மலைக்காடுகளில் யானைகள் அதிகமாக இருந்தன. கொங்கு நாட்டு யானைமலைகளும் அதனைச் சேர்ந்த காடுகளும் அக்காலத்தில் உம்பற்காடு (யானைகள் நிறைந்த காடு ) என்று பெயர் பெற்றிருந்தன. யானைகளைப் பிடித்துப் பழக்கி அவைகளைப் போர்க்களங்களில் போர்செய்வதற்குப் பயன்படுத்தினார்கள். அக்காலத்து அரசர்கள் வைத்திருந்த நான்கு வகையான படைகளில் யானைப் படையும் ஒன்று.
அன்று சேர நாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் நெடுஞ்சேரலாதன். அந்நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது இன்றைய ஆனைமலைக் காடுகள். பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கியத்தில் இமயத்தில் வில்லைப் பொறித்த நெடுஞ்சேரலாதனின் வீரத்தைப் போற்றிப் பாடியதற்காக புலவர் குமட்டூர்க் கண்ணனார்க்கு இந்த உம்பற்காட்டுப் பகுதியிலிருந்த 500 ஊர்கள் பரிசிலாக வழங்கப்பட்டது ..
அதே போன்று கண்ணகிக்குக் கோயில் கட்டிய சேரன் செங்குட்டுவன் தன்னை ஐந்தாம் பதிற்றுப்பத்தில் பாடிச் சிறப்பித்த புலவர் பரணருக்கு உம்பற்காட்டுப் பகுதியிலிருந்து கிடைக்கும் வரிப் பணத்தில் பாதியைப் பரிசிலாக வழங்கினான். அத்துடன் தன் மகன் குட்டுவன் சேரல் என்பவனையும் புலவர்க்குப் பாதுகாவலாகவும், உறுதுணையாகவும் இருக்கும்படி ஆணையிட்டான்.
உம்பற்காட்டுப்பகுதியின் இயற்கை வளம் குறித்த பாடல்களை சங்க இலக்கியங்களில் காணலாம் . அன்று மட்டும் அல்ல ,இன்றும்கூட மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள ஆனைமலை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது கடல் மட்டத்தில் இருந்து 2,513 மீட்டர் உயரம் கொண்டது. 100 ஆண்டுகளுக்கு முன் கள்வர்களால் மரங்கள் வெட்டப்பட்டு, பொட்டல் காடாக காணப்பட்ட சில ஆனைமலைப் பகுதிகளை அழகிய வனமாக மாற்றியவர் "‘ஹியூகோ பிரான்சிஸ் அன்றேவ் வுட்" என்ற ஆங்கிலேய வன அலுவலர் 18-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி காரணமாக ஓக் மரங்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. இங்கிலாந்தில் இருந்த வலிமையான ஓக் மரங்கள் முற்றிலும் வெட்டப்பட்ட நிலையில், கப்பல் கட்டுதல், தொழிற்சாலை, புதிய ரயில் பாதை அமைத்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக வலுவான மரங்கள் தேவைப்பட்டன. அப்போது, ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவின் ஒரு பகுதியான ஆனைமலைக் காடுகளில் பெருமளவில் ஓக் மரங்களைப் போன்ற வலிமையான தேக்குமரங்கள் இருப்பதை அறிந்து அவற்றை வெட்டிச் சாய்த்தனர். மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டதால், மழைப்பொழிவு குறைந்து, காட்டு விலங்குகள் குடிநீருக்காக மனிதர்களின் குடியிருப்புகளை நோக்கி வந்தன. காடுகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஆங்கிலேய அரசு 1855-ல் காடுகளுக்கென தனித் துறையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆனைமலைத் தொடரில் அழிந்த வனப் பகுதியை மீட்டெடுக்கும் நோக்கில், மறுசீரமைப்பு பணிக்காக 1915-ம் ஆண்டு டாப்சிலிப் பகுதிக்கு ஹியூகோ வுட்டை அனுப்பினர். அவர் பணியில் சேர்ந்தவுடன், மரங்கள் வெட்டப்பட்ட காடுகளில் பயணம் செய்து, அரசுக்கு ஒரு செயற்திட்டம் கொடுத்தார். மரத்தை வேரோடு வெட்டாமல், நிலத்துக்கு மேலே ஒரு அடி விட்டு வெட்டுவது. 25 ஆண்டுகளைக் கடந்த மரங்களை மட்டும் வெட்டுவது. ஒரு மரத்தை வெட்டினால் நான்கு மரக்கன்றுகளை நடுவது என்ற, காடுகளைப் பாதுகாக்கும் இவரது செயற்திட்டத்தை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது ஏற்கெனவே வெட்டப்பட்ட மரங்களால் நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களைப் பழங்கு டியின மக்கள் உதவியுடன் செய்து, அதை அரசு அலுவலகங்களுக்கு விற்று, அதில் கிடைத்த பணத்தில் புதிய மரக்கன்றுகளை நடச் செய்தார். இங்கிலாந்தில் ஐ.எப்.எஸ். படித்த வுட், பங்களாவில் தங்காமல், டாப்சிலிப் அருகே உலாந்தி பள்ளத்தாக்கில் ‘மவுன்ட் ஸ்டுவர்ட்’ என்ற சிறிய வீட்டில் தங்கி, முறையான பாதை இல்லாத காடுகளில் பயணம் செய்து பணியாற்றினார்.
வேலை போக மீதி நேரம் தனியாக காடுகளில் நடந்து செல்லும் ஹியூகோ வுட், சட்டைப் பைகளில் எடுத்துச் செல்லும் தேக்கு விதைகளை, தனது வெள்ளிப் பூண் போட்ட ஊன்றுகோலால் நிலத்தில் குத்தி, அந்தக் குழியில் ஒரு தேக்கு விதையை விதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்படி பல ஆண்டுகள் நடந்து நடந்து இவர் விதைத்த தேக்கு மரங்கள் இன்று டாப்சிலிப் பகுதியில் வானுயர்ந்து நிற்கின்றன.
திருமணம் செய்து கொள்ளாத ஹியூகோ வுட் பணி ஓய்வுக்குப் பிறகு குன்னூரில் வசித்தவர், 1933-ல் மறைந்தார். “நான் மிகவும் நேசித்த ஆனைமலைக் காட்டில், அடர்ந்த மரங்களுக்கு நடுவே என் உடலைப் புதைக்க வேண்டும்” என உயிலில் அவர் தெரிவித்திருந்தபடியே, ‘மவுன்ட் ஸ்டுவர்ட்’ வீட்டுக்கு அருகில், அவரால் உருவாக்கப்பட்ட தேக்கு மரங்களுக்கு நடுவே உடல் புதைக்கப்பட்டது. அவரது கல்லறை மீது, “என்னைக் காண விரும்பினால், சுற்றிலும் பாருங்கள்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆம், ஓங்கி உயர்ந்த மரங்களின் ஜீவனாக அவர் இன்றும் வாழ்கிறார்” அந்த உயர்ந்த மனிதரால் சீரமைக்கப்பட்ட ஆனைமலை காடுகளின் இன்றைய நிலை ?