Loading...
மேலும் அறிய

தமிழ் கற்றலுக்கு வரவேற்கிறோம்

உலக அரங்கில் இன்று சுமார் 4500 மொழிகள் பேசப்படுகின்றன. அவைகள் எழுத்துகளை அடிப்டையாகக் கொண்ட மொழிகள் ,ஒலிகளை அடிப்டையாகக் கொண்ட மொழிகள் என இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக சீன மொழி எழுத்துகளை அடிப்டையாகக் கொண்ட மொழியாகும். ஒலி வடிவங்களை அடிப்டையாகக் கொண்ட மொழியே தமிழ்மொழி. எனினும் இன்று தமிழ் மொழி எழுத்துகளை அடிப்டையாகக் கொண்ட ஒரு மொழியாகக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. 12 உயிர் எழுத்துகள் ,18 மெய் எழுத்துகள் ,216 உயிர்மெய் எழுத்துகள் ,ஒரு ஆயுத எழுத்து என 247 எழுத்துகள் , அவற்றின் ஒலி வடிவங்களுடன் தமிழ் பயிலும் நிலையில் மாணவர்கள் உள்ளனர். தமிழ் மொழியினை எழுத்துக்களின் அடிப்படையில் கற்பதில் உள்ள இடர்பாடுகளைப் பட்டியலிடும் போது குறிப்பாக அனைவரும் சொல்வது “தமிழில் எழுத்துக்கள் மிகமிக அதிகம். அவற்றை நினைவில் வைத்து எழுதுவதும் கடினம்; அவற்றை ஒலிப்பதும் கடினம்” என்ற குறைபாடுதான். ஆங்கிலத்தில் 26 ஒலி வடிவ எழுத்துகள்தான் தமிழில் 247 எழுத்துகளையும் அதன் ஒலிவடிவங்களையும் நினைவில் நிறுத்திக்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பார்கள்.

குறிப்பாக எழுத்துகளின் அடிப்படையில் தமிழ் கற்பது வெளிமாநிலங்களும் ,வெளிநாடுகளிலும் உள்ள மாணவர்களுக்கு ஓர் அறைகூவலாக (Challenge) உள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்மொழியினை எழுத்துகளின் அடிப்படியில் கற்றுக்கொடுப்பதே ஒரு தவறான அணுகுமுறையாகும். ஒலிகளின் அடிப்படையில்தான் தமிழ்மொழியினைப் பயில வேண்டும்.

ஏன்?

ஒரு மொழியினை ஒலிப்பதற்கு உருவாக்கப்படும் ஒலிகள் பற்றிய ஆய்வினை ஒலிப்பியல் என்பார்கள். தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழியாகும். அவ் ஒலிப்பொழுக்கத்தை வரையறுத்துள்ளது தமிழ் ஒலிப்பியல். அதுமட்டுமின்றி ஒலியன்களையும் அடித்தளமாகக் கொண்டது தமிழ் ஒலிப்பியல். தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் அடிப்படை ஒலி அலகுகளைத்தான் ( Basic Sound Units) ஒலியன்கள் என்கிறோம். தமிழ் மொழியில் காணப்படும் அனைத்துச் சொற்களையும் ஒலிப்பியல் ஆய்வுசெய்து, அவை அனைத்தும் 12 உயிர் ஒலியன்களையும் 18 மெய் ஒலியன்களையும் அடித்தளமாகக் கொண்டு ஒலிப்பதை அறிய முடிகிறது. இந்த 30 ஒலியன்களின் அடிப்படையில்தான் தமிழ் இலக்கணமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் ஒரு இசை சார்ந்த மொழியாகும் Tamil is a musical language என்பார்கள். 30 ஒலியன்களை அல்லது முதன்மை ஒலிகளை 30 தமிழிசைச் சுரங்கள் (Tamil musical notes) என்பார்கள்.

தமிழ் மொழியினை ஒலிகளின் அடிப்படையில் ஓர் இசை சார்ந்த மொழியாகப் பயிலும்போதுதான் ,தமிழ் மொழியின் இனிமையையும் , தமிழ் இலக்கண மரபுகளின் ஓசைநயத்தையும் கற்போரால் நன்கு உணரமுடியும். இதனைக் கருத்தில் கொண்டு 30 முதன்மை ஒலிகளையும் ஒருசில உயிர் ஒலிக்குறியீடுகளையும் பயன்படுத்தி தமிழ் மொழியினை எளிமையாக ,இனிமையாக ,இலக்கண மரபுகளோடு மாணவர்கள் பயிலும் முறையினை அறிமுகப்படுத்தும் தளம் இது.